ஆண் அழகு குறிப்பு

மூங்கில் தோள்களோ, தேன்குழல் விரல்களோ, மாவிலைப் பாதமோ, மங்கை நீ வேதமோ... ’ எனப் பாடிய கண்ணதாசன் முதல் 'ஊதா கலரு ரிப்பன்...’ எனப் பாடிய இன்றைய கவிஞன் வரை பெண்ணழகைப் பாடாதோர் இல்லை. அழகு என்றால் அது பெண்ணுக்கு மட்டும்தான் என்ற ஒரே முடிவில் எல்லோரும் விதவிதமாக வர்ணிக்கிறார்கள். ஆண் என்றாலே, 'தோள் கண்டார் தோளே கண்டார்; தொடுகழல் கமல அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் ’ என வீரத்துக்கு அடையாளமாகத்தான் அவனது இறுக்கமான உடல் சுட்டப்படும். ஆனால், இன்றைக்கு ஆண் அழகைக் குறிவைத்து சந்தையில் குவியும் அழகு கிரீம்களைப் பார்த்தால்... அடேங்கப்பா!

'வெள்ளைத் தோல்’ மோகத்தில், ஆணுக்கான ஃபேர்னஸ் கிரீமில் தொடங்கி, குளிப்பதற்கு முன்பு குளிப்பதற்குப் பின்பு, மழிப்பதற்கு முன்பு, மழிப்பதற்குப் பின்பு, தோலின் ஈரப்பதம் காக்க, நிறம் மங்காமல் இருக்க, முடியை வளர்க்க, முடியை வளைக்க, வியர்வை நாற்றத்தை மறைக்க... என இந்தப் பட்டியல் இப்போது நீண்டுகொண்டேபோகிறது. முடி வெட்டும் கடையில், ''நீங்க ஏன் கொஞ்சம் ஃபேஷியல் பண்ணக் கூடாது, ஃபேஸ் லைட்டா டல்லாயிருக்கே சார்?' என கட்டிங் போடும் தம்பி, நாசூக்காக மார்க்கெட்டிங் பண்ணும்போது நம்மில் பலருக்கும் 'பண்ணிப் பார்த்தால்தான் என்ன?’ என்ற நப்பாசை துளிர்விடும்.

'ஆண்பால் - பெண்பால் என இருக்கும் பால் வித்தியாசம் தோலுக்கும் உண்டா?’ என நிறையப் பேருக்குச் சந்தேகம் இருக்கும்.  கர்ப்பப்பைக்குள் ஆண் குழந்தை ஜனிக்கும்போதே, கொஞ்சம் கூடுதல் தடித்த தோல் என ஏற்பாடு நடந்துவிடுமாம். ஆண் ஹார்மோன் டெஸ்டோஸ்டீரான், அதன் துணைச் சுரப்பு டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரான் முதலான ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் கூட்டணியால்தான் ஆணின் தோல் பெண்ணின் தோலைவிட 25 சதவிகிதம் தடிக்கிறது. ஆணின் தோல்  இயற்கையாகவே புற ஊதா கதிர் தாக்கத்தை, வெளிப்புற வெப்பம் மற்றும் குளிர்ச்சியால் ஏற்படும் தொல்லை ஆகியவற்றைத் தாக்குப்பிடிப்பது இதனால்தான். அதே நேரத்தில் கொலஸ்ட்ரால், செரமைடு, கொழுப்பு அமிலங்கள்... போன்றவை ஆணின் தோலில் கொஞ்சம் போனஸாகவே இருப்பதால், சோரியாசிஸ் முதல் அலர்ஜியில் வரும் பிற தோல்வியாதிகள் வரும் வாய்ப்பு பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம். தோலில் ஏற்படும் காயம் பெண்ணுக்கு ஆறுவதைவிட, கொஞ்சம் மெதுவாகவே ஆணுக்கு ஆறுவதற்குக் காரணமும் இந்தத் தடித்த தோல்தான்.

கொளுத்தும் வெயிலில் டை கட்டிக்கொண்டு,  வடாம் வற்றல் தொடங்கி வாக்கிங் குச்சி வரை விற்கும் 'வணிகப் பெருக்கி’ ஆண் சமூகம், சாலையிலேயே சுற்றித் திரிவதால் வியர்வை நாற்றம், அரிப்பு, சொறி, சிரங்கு முதலான 88 விதமான பிரச்னைகளைப் போக்க, கிருமிநாசினி கலந்த சோப்புகளைத் தேடுவது இயல்பு. அதோடு, அப்படியே அந்த சோப்பில் TRICLOSAN  சேர்க்கை இருக்கிறதா என்று பார்ப்பதும் நல்லது. சோப்பிலும் பேஸ்ட்டிலும் 40 வருடக் காலமாகச் சேர்க்கப்படும் இந்த TRICLOSAN , 'அப்படி ஒண்ணும் பெரிசாப் பயன் தரலை; ஆனால் தேய்க்கிறவனுக்குப் புற்றையும், தேய்ச்சுக் கழுவிவிடப்படும் கழிவுநீர் மண்ணுக்குப் போகும்போது நுண்ணுயிர்களுக்கு ஆபத்தும் தருவதாக’ இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

'அப்போ நாங்களும் நலங்கு மாவு தேய்க்கலாமா?’ என வெட்கப்படும் ஆண்களுக்கு ஒரு ரெசிப்பி. நலங்கு மாவில் கஸ்தூரி மஞ்சளுக்குப் பதிலாக கொஞ்சம் வேப்பிலை, கொஞ்சம் கருஞ்சீரகம் சேர்த்துத் தேயுங்கள். தோல் வறட்சி நீங்கி வழுவழுப்பாக, வாசமாக அதே சமயம் கிருமிநாசினியைப் பயன்படுத்தாமலே, தோல் வனப்பு கிட்டும்.

முகத்தில் முளைத்த முகப்பருவுக்கே கலவரம் ஆகும் இளசுகள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆண் தன் முகத்தில் இருக்கும் முகப் பருவை நோண்டினால், லேசில் ஆறாத அவன் தடித்த தோல்தன்மையால், காலம் முழுக்க முகம் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியதுபோல மாறிவிடும். நேற்று அரைத்த தோசை மாவில் ஃபேஷியல் செய்வது, திருநீற்றுப் பச்சிலையை அரைத்துப்போடுவது அல்லது அதன் எண்ணெய்யை பரு மீது பூசுவது போன்ற சின்ன மெனக்கெடல்கள், பருக்கள் இருந்த அடையாளம் இல்லாமல் அழித்துவிடும்.

கழுத்து, அக்குள், தொடையிடுக்குப் பகுதிகள் மட்டும் கன்னங்கறுப்பாவதற்கு அங்கே சேரும் அழுக்கு, வியர்வை மட்டும் காரணங்கள் அல்ல. அந்தப் பகுதியில் அதிகரிக்கும் உடல் உட்சூடும்தான் காரணம். 'நாள் இரண்டு, வாரம் இரண்டு, வருஷம் இரண்டு’ என நலவாழ்வு விதியே உண்டு. அது... தினம் இரண்டு முறை மலம் கழிப்பது; வாரம் இரண்டு முறை எண்ணெய்க் குளியல் எடுப்பது; வருடம் இரண்டு முறை பேதி மருந்து உட்கொள்வது என்பதுதான். இதில் பேதிக்கு மருந்து எடுக்கும் பழக்கம் மொத்தமாக மலை ஏறிவிட்டது. 'பேதியுரை’ என்பது வெறும் வயிற்றுப்போக்கு உருவாக்கும் விஷயம் அல்ல. அன்று விளக்கெண்ணெய் முதல் பல பேதியுரை மருந்துகளை, உடலின் வாத, பித்த, கப, சமநிலைக்காக வருடத்துக்கு இரு முறை மருந்தாகப் பரிந்துரைத்தனர் நம் முன்னோர்கள். உடனே பேதி மருந்து வாங்க மெடிக்கல் ஷாப் கிளம்பி விடாதீர்கள். எப்போது, எதை, எப்படி, எதோடு சேர்த்து, எந்த வயதில், எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் எனப் பெரிய பட்டியலே இருக்கிறது. குடும்ப மருத்துவரை ஆலோசித்து உடல்வாகு, நாடி நடைக்கு ஏற்றவாறு பேதியுரை எடுத்துக்கொள்வது... இந்த கலர் மாற்றத்தைக் காணாமல் செய்துவிடும்.    

முன் நெற்றி வழுக்கைக்குக் கலவரப்படுவதும், பின்மண்டை சொட்டைக்குச் சோர்ந்து போவதும் இன்றைய இளைஞனின் இன்னொரு 'தலை’யாயப் பிரச்னை. சமீபமாக, கல்லூரியில் படிக்கும் காலத்தில் தலை வாருவது அவமானச் சின்னமாகவே மாறிவிட்டது. குளிக்காமல், தலை வாராமல் அழுக்குச் 'சென்ராயனாக’ இருந்து ஆட்டம் போட்டுவிட்டு, 'தறுதலையா இருந்தது போதும் இனி 'தல’ ஆகணும்’ என வேலைக்குச் சேர்ந்து, டீம் லீடர் கண்டிப்பில் குளிக்க, மழிக்க, தலை வார ஆரம்பித்ததும், முடிகள் சீப்பில், தலை துவட்டும் துண்டில்... என உதிர்ந்து விலகி ஓட ஆரம்பிக்கும். தலைமுடி மீது இயல்பாகவே கரிசனம் எப்போதும் வேண்டும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உடலில் பெருகும் பித்தம் நீங்கும் உபாயத்தை இயற்கை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது. ஆணின் உடலில் சேரும் பித்தம், அவன் தினசரி தலைக்குக் குளிப்பதிலும், எண்ணெய்க் குளியலிலும், உணவிலும்தான் நீங்க வேண்டும்.தலைமுடி கொட்டுவது என்பது, உடலில் பித்தம் கூடிவிட்டதைச் சொல்லும் உடல் மொழி.  தாடி, மீசை, நெஞ்சில் முடி...  என கரடி மாதிரி உடல் எல்லாம் முடி வளரும் மரபு ஆண் ஹார்மோனில் பொதிந்திருந்தாலும், டெஸ்டோஸ்டீரோனுக்கும் தலைமுடிக்கும் உள்ள தொடர்பை அரைகுறையாக இணையத்தில் படித்துவிட்டு, 'வழுக்கை வருதே... ஆண்மை குறையுதோ’ என அங்கலாய்க்கும் ஆண்கள் இப்போதும் அதிகம். முடி உதிர்வதில் எல்லாம் 'அது’ குறையாது. அதிகபட்ச உடல் சூடுதான் பிரச்னை. வறுத்த சோற்றையும் சிக்கன் 65-யையும் நள்ளிரவில் சாப்பிடுவதைக் குறைப்பதில் இருந்து அதற்கான அக்கறை ஆரம்பிக்க வேண்டும். இளவழுக்கை, இளநரை வரும் இளைஞர்கள் இனி நெல்லிக்காய் ஜூஸுக்கு மாறுவது நல்லது.

'ஒருநாள் சிரித்தேன்; மறுநாள் வெறுத்தேன் உனைக் கொல்லாமல் கொன்று புதைத்தேன்’ எனக் காதலி டென்ஷன் ஆவதற்கு வியர்வை நாற்றமும் காரணம் என்கிறார்கள் உளவியலாளர்கள். ஓடி ஓடி உழைக்கையில், கக்கத்தில் கசியும் வியர்வையில், உச்சா போகும் உடல் பாக்டீரியாக்களால்தான் அந்த 'உவ்வே’  நாற்றம் உருவாகிறது. வியர்வையைக் குறைக்கணும்; கூடவே சேட்டை  பாக்டீரியாவை நகர்த்தணும்; அப்படியான மணமூட்டி தேவையே ஒழிய, 'இதை அடிச்சிக்கிட்டீங்கனா அகில உலக அழகியும் உங்க காதலுக்கு கர்ச்சீப் போட்டு வைப்பாங்க’ டைப் விளம்பரங்களை நம்பி வீணாகக் கூடாது. பாக்டீரியாவை நகர்த்தி, சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் இயற்கையாகவே மணத்தைக் கொடுக்கும் கோரைக்கிழங்கு, சீமை கிச்சிலி கிழங்கு, பாசிப்பயறு மாவுக் கலவையை காலை - மாலை  தேய்த்துக் குளிப்பது வியர்வை தரும் துர்நாற்றத்தைப் போக்கும்.

சிக்ஸ்பேக், சிவப்பழகு, சுருட்டை முடி, வழ வழ தோல் இவற்றைத் தாண்டி,

'பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே;
கண்களை நேராய்ப் பார்த்துதான்

நீ பேசும் தோரணை பிடிக்குதே ’ என இன்றும் பல பெண்களின் மதிப்பீடு இருக்கிறது என்பதை ஆண்கள் மறந்துவிடக் கூடாது!