நலம் 360- தொடர் இறுதிக் கட்டுரை

நலம் 360– இளைப்பாறும் சமயம் இது.  ”நலத்தின் கோணம் 360 டிகிரி; நலம் என்பது நோய்க்கும் மருந்துக்கான தட்டையான பாலம் அல்ல..”என்பதைத்தான் எழுதிவந்தோம். இளங்காலையில் நாம் போடும் ஒரு தும்மலுக்குப் பின்னே இரத்தத்தில் கொஞ்சம் கூடுதாலாகிப் போய்விட்ட இமினோகுளோபுலின்கள் மட்டும் காரணமில்லை. தொலைந்துபோய்விட்ட சில ஈய்ச்சட்டியில் செய்த ரசம், துளசிக் கசாயம் முதலான அன்றாட நல்லுணவும், சில ஆண்டுகளாய் காற்றில் கசிய விடும் அம்மோனியா முதலான ஆயிரக்கணக்கான பிரபஞ்சத்துக்குப் பரிச்சியமில்லாத வாயுக்களும், கரிசனமும் காதலும் காணாமல் போய், ஆதார் அட்டையில் மட்டுமே ஒட்டியிருக்கும் குடும்பமும் கூட காரணமாயிருக்கும் என்ற புரிதலினைச் சொல்ல எழுதியதுதான் நலம் 360.

மொத்த சமூகமும் நலமாயிருக்க நம் முன்னோர்கள் மெனக்கிட்ட போரிட்ட வரலாறு பெரிதினும் பெரிது.  “நோயெல்லாம் கடவுளும் கன்மமும் தந்தது; அதை பரிகரிக்க நினைப்பது, கடவுளை எதிர்ப்பது போன்றது” என்ற போக்கை எதிர்த்து, ”நீ சாப்பிட்ட உணவும், நீ வளர்க்கும் கோபம் காமம், குரோதம், மோகம், மதம், மாச்சரியம் இடும்பை, அகங்காரம்” என்னும் எட்டு குணமும் ஒட்டியவைதான் காரணம் எனச்சொன்னவர்கள் நம் 18 சித்தர்கள் மட்டுமல்ல. இன்றைய நவீன மருத்துவத்தின் துவக்கப்புள்ளிகளான இங்கிலாந்தின் டார்வினும், நியூட்டனும்,  நம் நாட்டு வங்காளத்து சூஃபீக்களும், வடலூர் வள்ளலாரும் கூட அந்த வரிசையில் உள்ளவர்தாம். சாதீய சமூக அவலங்களை எதிர்த்து,  நலத்தின் 360 கோணத்தை முதலில் நமக்குக் காட்டியவர்கள் அவ்ர்கள்தாம்

இப்படிபிறந்த நம் நலப்பேணலை என்பது நாம் நெடுநாள், உணவோடும், வாழ்வியலோடும், மொழியோடும், பண்பாட்டோடும் வைத்திருந்தோம். இப்பரந்த புரிதல்தான் நமது காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் தடுப்பூசிகளைப் போட்டு ஆயுளை ஆரோக்கியமாய் நகர்த்திய விஷயம். நீர் கருக்கி நெய் உருக்கி மோர் பெருக்கி’, என்று உணவுச் சூட்சுமங்களை சொல்லி நோய்கற்றியவிஷயம்.காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளனுக்கு கூற்றை உதைக்கும் குரியதுவாமே”- என மூச்சுப்பயிற்சியில் அன்றாடம் செப்பனிட்டுக்கொண்டிருந்த விஷயம். கூடவே “இது சூடு; இது குளிர்ச்சி; இது பின்பனிக்கால உணவு; இது மருதத்திணை உணவு; இது பேறுகால உணவு எனும் சமையலறை அக்கறைகள் இருந்த விஷயம்

இருந்தும் கூட, நம் சாமானியனின் சராசரி ஆயுட்காலம் சுதந்திரம் அடையுமட்டும் 37 வயதுதான் இருந்தது. அம்மையிலும், ஊழியிலும், பிளேக்கிலும் காசத்திலும் நம்மில் நிறையபேர் காணாமல் போன வரலாறுண்டு. பிறந்ததில் 3 க்கு ஒன்றை தொட்டிலுக்குப்பதில் பிணக்காட்டுக்கு அனுப்பியவர்களாய்த்தான் இருந்தோம்.. ஒருவேளை, எட்வர்டு ஜென்னரும், லூயி பாஸ்டரும், ராபர்ட் கோச்சும், வந்திராவிட்டால், இன்று நம்மில் எத்தனைபேர் நடமாடிக் கொண்டிருப்போம்? என்பது மிகப்பெரிய கேள்வி. அப்போதைய சமூகத்தின் தொற்று நோய் நலச்சவால்களுக்கு, தன் வாழ்வையே பணயம் வைத்து விடைதேடிய அந்த விஞ்ஞானிகள் கூட்டத்துக்கும் அண்டத்திலுள்ளதே பிண்டம்;; பிண்டத்திலுள்ளதே அண்டம் எனப்பாடிய சித்தர்கள் கூட்டத்துக்கும் அடையாளங்கள் மட்டும்தான் வேறு வேறு. ஆனால் அக்கறைகள் ஒன்றுதாம். நவீன அறிவியலின் புரிதலின் துணைகொண்டு அம்மையையும், வெறி நாய் வைரசையும் விரட்ட அவர்கள் தடுப்பூசிகளைத் தந்திராவிட்டால், நம்மில் நிறையபேர் இன்னும் நடமாடிக்கொண்டிருக்க இன்றும் வாய்ப்பில்லை.

 

1953-இல் ஜோனாஸ் சால்க் தான் கண்டறிந்த போலியோ தடுப்பூசியை முதலில் தனக்கும் தன் குழந்தைக்கும் போட்டுக் கொண்டு உலகில் போலியோவை விரட்ட எடுத்த முனைப்பும், 48 நாள் தொடர்ச்சியாக கல்வத்தில் 24 விதமான சாறுகளை விட்டு அரைத்து, ஆயிரம் வரட்டிகளை வைத்துப் புடமிட்டு, உலோக மூலப்பொருளை உடலுறிஞ்சிப் பயனாக்கும் பாதுகாப்பான உப்பாக்கி, அதையும் குண்டூசி முனையில் எடுத்து தேனிலோ, மூலிகைப்பொடியிலோ குழைத்து, தான் செய்த பெருமருந்தை தான் சாப்பிட்டுப்பார்க்கும் நம் தமிழ்ச் சித்தனும் எனக்கு ஒரே புள்ளியில்தாம் தெரிகின்றனர்.

அதேபோல், உள்ளங்கையின் பகுதிகளில் உடலை உற்றுப்பார்க்கும் சுஜோக்கும், உடலின் பல்வேறு புள்ளிகளில் உடலின் உயிராற்றல் குவிந்தும், சீராக ஓடும் ஓட்டத்தை அறியும் வர்மமும், தொடுசிகிச்சையும் மிக முக்கியமான நலப்புரிதல்தாம். ”யிங்- யாங்கின்”ஒருமிப்பை மூலிகைகளைக் கொண்டும், தாய்-சீ நடனம் மூலம் மூச்சை ஆண்டும் சிகிச்சையளிக்கும் சீனமருத்துவமாகட்டும், அதன் இன்னொரு பரிமாணமான ஜப்பானிய கம்போ மருத்துவமாகட்டும், அரபு மருத்துவம், யுனானி மருத்துவம் என ஒவ்வொன்றும் அக்கறையும் அறமும் கொண்ட நீண்ட மரபின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பதிவுகள்.

ஒருபக்கம் இப்படி நீண்ட தெள்ளிய அனுபவம் கொண்ட மரபு இருக்கின்றது. இன்னொரு பக்கம் இந்த உடல், பல ஆயிரம் கோடி செல்களாகும் முன்னர், முதல் ஸ்டெம் செல்லுக்குள் எப்படி இத்தனை திட்டங்கள் இருக்கின்றது? என படு நுணுக்கமாக ஆய்ந்து சொல்லும் உச்ச அறிவியல் படைத்திருக்கின்றோம். ஆனால் இரு புள்ளிகளும், நம் விளிம்பு நிலைச் சாமானியனின் நலத்தேடலுக்கு விடை சொல்லாமல் விலகிப் போவதுதான் வேதனையிலும் வேதனை. நலம்360 சொல்ல நினைத்ததும் சிந்திக்க நினைத்ததும் அதை மட்டும்தான். 

மேற்கத்திய மருத்துவமுறை படித்தறிந்து விட்டதால், உள்ளூர் நீண்ட அனுபவம் எல்லாம் மடமையும் அறிவற்றதுமாய் ஆகிப்போய்விட்ட்தாய் உதாசீனப்படுத்தி ஓரங்கட்டுவது ஒருபக்கம். ”நவீன அறிவியலே மொத்தமாய் பொய்; எங்கள் பாரம்பரியம் அத்தனையையும் விஞ்சியது. உடலையும் உலகையும் ஞானக்கண்களால், முழுமையாய் அறிந்துவிட்டோம். இதில் தேட ஒன்றுமில்லை. உள்ளது உள்ளபடி செய்துபோவதைத் தவிர கேள்விகள் கேட்பதோ, ஆய்வுக்குட்படுத்துவதோ வன்முறை” என குமுறும் இன்னொரு பக்கம். இருசாராராரும் உற்றுப்பார்க்க வேண்டிய இன்னொரு கோணம் இருக்கின்றது.

நியூட்டனும், பிளமிங்க்கும், சால்க்குக்கும் நகர்த்திய நவீன மருத்துவ விஞ்ஞானம் இன்று மொத்தமாய், வணிகத்தின் இரும்புக் கரங்களுக்குள் சிக்கியுள்ளது. சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் என்பதால் பாதுகாப்பாய் பல லோ பட்ஜெட் படம் ரிலீஸ் தள்ளி வைப்பது போல, நோயகற்ற தயாராயிருந்தாலும் வணிகத்துக்காக, “இன்னும் 15 வருசம் கழித்து, இந்த புற்று நோய்க்கு மருந்தை ரிலீஸ் பண்ணலாம்”, என பல மருந்துகள் ரிலீஸ் தள்ளிப்போகும் வணிகப்பிடி, நிறைய மருத்துவருக்குமே தெரியாது. ”மருந்து ரெடி; நோய் எங்கே? இதற்காக இதுவரை இத்தனை மில்லியன் டாலர் கொட்டியிருக்கின்றோம்..குப்பையிலா போட முடியும்,? நோயை பரப்புங்கள். எனும் தமிழ் சினிமாவின் ஒன் லைன்கள் உருவாக்கும் கம்பெனிகள் நம் உலகில் உண்டு. ஐன்ஸ்டீனும் நியூகோமனும் ஃபேபரும் அறிவியலை நகர்த்திக் கொண்டிருந்த சமயத்தில், அவர்கள் விஞ்ஞானத்தைக் கொண்டே,  லிட்டில் மாஸ்டரை ஜப்பானிலும், ஏஜண்ட் ஆரஞ்சை வியட்னாமிலும், மஸ்டர்டு கேசை இத்தாலி ஓரக்கடற்படைத்தளத்திலும் தெளித்து கோடிக்கணக்கானவர்களை கொன்று குவித்த வரலாறை நாம் மறக்க முடியாது.  நவீன அறிவியலை அன்று மண் வெறிக்காக பயன்படுத்திய கூட்டம், இன்று பணத்துக்கும் பங்குச்சந்தைக்குமாக நகர்த்த தயங்காது மருத்துவர் உலகம் இதை உற்றுப்பார்த்துதான் ஆகவேண்டும்.

நோய்க்கான காரணத்தை நுண்கதிர்களால் நோண்டுகையில், நுண்ணறிவால், புதிதாய் இந்த மருந்து எதற்கு, இதன் சிறப்புக்குப் பின்னால் சீரிய அறம் சார் விஞ்ஞானம் மட்டுமே உள்ளதா? முந்தைய மருந்தின் காப்புரிமை வணிகம் மடிந்ததால், புது மருந்தின் புகுத்தல் நுழைகிறதா? என்பதையும் சிந்திக்கும் நுண்மாண் நுழைபுலம் நமக்கும் வேண்டும். இன்னும் பறவைக்காய்ச்சலும் பன்றிக்காய்ச்சலும் ஏன் எச்ஐவியும் கூட ஆய்வகங்கள் தோற்றுவித்தவை என்ற அறைகூவலை உதாசீனப்படுத்தாமல் உற்றுப்பார்க்க வேண்டும்.

இன்னொரு பக்கம் நாங்கள் ’ககன குளிகை போட்டு வானில் பறந்தவர்கள்;புஷபக விமானத்தில் கிரகங்களுக்கு இடையே பறந்தவர்கள்‘ எங்களுக்குத் தெரியாததா? என சமூக மடமைகள் பலவற்றிற்கு சந்தனக்காப்பு போட்டு கும்பிடுபவர்கள் இன்னும் உண்டு. பிறந்த பச்சைக்குழந்தையை, அடைமழையின் அமிலமழைத்தண்ணீரில் குளிப்பாட்டி எதிர்ப்பாற்றல் கொடுக்கும், மரணத்தின் விளிம்பில் நிற்கும் நோயாளியை ”பத்தாயிரம் ஆகும்; கொல்லிமலைக்கு மேலே கொஞ்சூண்டு மூலிகை ஒன்று இருக்கின்றது. அது என் கண்ணுக்குத்தான் தெரியும். அமாவாசைக்கு அடுத்தநாள் அதை கொணர்ந்தால் நீங்க அடுத்த ஒலிம்பிக்சில் ஓடலாம்” என் பொய்யுரை சொல்லி, அவரின் இறுதி மூச்சில், இளைப்பாருவதும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது. அதேசமயத்தில் சின்னதாய் ஒரு கட்டுமருந்தை, உரைகல்லில் 3 இழைப்பு இழைத்து, உயிர்பிரியும் சன்னியினை நிறுத்திக் காப்பாற்றிய மருந்தையும் அதன் செய்முறையையும் காவிரியில் ஆடிஅமாவசையில் எறிந்திருக்கின்றோம். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னரே போரிலோ, விபத்திலோ கையிழந்த வாலிபனை அதன்பின்னரும் இருபது ஆண்டுகள் வாழும்வண்ணம் அறுவைசிகிச்சை செய்ததை மதுரையின் கோவலன்மெட்டில் அகழ்வாராய்ச்சியில் கார்பன் தரவுகள் சொல்லியிருந்தாலும், மிச்சமிருக்கும் சித்தமருத்துவத்தில் ஆய்வுசெய்ய அத்தனை தடைகள்.  நிறைய மனத்தடை; கொஞ்சம்தான் பணத்தடை. சிக்கன்குனியாவையும், டெங்குவையும் கொஞ்சம் நிறுத்தி இரத்ததட்டுகளை உயர்த்திய நிலவேம்பு போல 750க்கும் மேற்பட்ட தமிழ் மூலிகைகள் களைச்செடியாக மட்டும் காத்திருப்பதும் உதாசீனபடுத்துவதும் உலகிலேயே இங்கு மட்டும்தான் நடக்கும்.

பகுத்துண்டெல்லாம் பல்லுயிரெலாம் எல்லாம் ஓம்ப வேண்டாம்; ஒரு கம்பெனி, ஒரு விதை; ஒரு அரசன் என வாழ்வதுதான் நாகரீகம் என உணவிலும், ”கரிசனம் எந்த சப்ஜெக்ட்? நான் படிக்கலையே? நான் மட்டும் செங்குத்தாய் வளர்வதுதான் வளர்ச்சி எனும்  நவீனகல்வியிலும், படுவேகமாய்  நாம் நகரத்துவங்கியதில் தொற்றாவாழ்வியல் நோய்க் கூட்டம் சுனாமியாய் நம்மை நோக்கி நகர்ந்து வருகின்றது. இப்போதேனும் கொஞ்சம் விழிக்க வேண்டும்.

நவீன அறிவியலினின் தேடலும், நீண்ட மரபின் புரிதலும் அறம் எனும் புள்ளியில் ஒருங்கிணைய வேண்டும். நானோ துகள்களை தேடும் நுண் ஆடிகள், சாணத்து வறட்டியில் புடமிட்டுச் சமைத்த மருந்துகளை மறுதேடல் செய்யவேண்டும்.. இனி வழியில்லை; இன்னும் காலத்துக்கும் மருந்துதான்; மரணம் அடுத்த நிறுத்தத்தில் என இருக்கும் பல நோயாளிகளுக்கு இந்த ஒருங்கிணைப்பு மட்டுமே பதிலளிக்க முடியும். எந்த காலத்தில சார் நீங்க இருக்கீங்க.. ? எனக்கு அதைப்பத்தியெல்லாம் தெரியாது..எதனாச்சும் ஏற்பட்டிருச்சுன்னா அப்புறம் எங்கிட்ட வரக் கூடாது? சொல்லிட்டேன்”, எனும் ஆங்கில வாசகங்கள்  நோயாளிகளிடம் இனி வேண்டாம்; அத்தனையும் பொய்; ஆபத்து; நான் மட்டும்தான் உனக்கான ஆபத்பாந்தவன்” என நோயின் முழுப்புரிதலில்லாமல் சொல்லும் பழமை போர்த்திய மடமையும் வேண்டாம்